search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லைப் பெரியாறு"

    முல்லைப்பெரியாறு மற்றும் மேகதாது பிரச்சனைகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக பொன்.ராதாகிருஷ்ணனுக்கு துரைமுருகன் பதில் அளித்துள்ளார். #DMK #DuraiMurugan #PonRadhakrishnan
    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு வரலாறே தெரியாத மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் “நாங்க புதுசா கட்டிக்கின ஜோடி தானுங்கோ” என்பது போல் ஊழலின் உறைவிடமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் அ.தி.மு.க.விற்கு வக்காலத்து வாங்குவதற்காக “தி.மு.க. துரோகம் செய்து விட்டது” என்று அபாண்டமாக பழி சுமத்துவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    132 வருட முல்லை பெரியாறு வரலாறு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் தலைவர் கலைஞரின் சாதனையை சிறுமைப்படுத்துவது போல் மத்திய அமைச்சர் பேசுவதை கழக தொண்டர்கள் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

    அமைச்சர் நினைப்பது போல் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் தரமில்லாத ஆடும் பாலத்தை அமைத்துவிட்டு, நள்ளிரவில் பொறியாளர்களை விட்டு சரி செய்யும் பிரச்சனை அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152அடியிலிருந்து 136ஆக குறைத்தது 1979-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சி என்பது கிளிப் பிள்ளைக்குக்கூட தெரியும்.

    ஆனால் முல்லை பெரியாறின் “கிழக்கும் மேற்கும்” தெரியாமல் பேசும் மத்திய அமைச்சருக்கு புரிந்திருக்காமல் இருக்கலாம். 1989-ல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்தி உத்தரவிட்டவர் கலைஞர் என்ற அடிப்படை உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஊழல் மகாசமுத்திரமாக காட்சியளிக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக தி.மு.க.வை கொச்சைப்படுத்துவது மத்திய அமைச்சருக்கு கொஞ்சம் கூட அழகல்ல.

    1997-ல் அணையை பலப்படுத்தும் இறுதிப் பணிகள் மேற்கொண்டது, 2000-ம் வருடவாக்கில் 136 அடியிலிருந்து 142 அடி உயர்த்தலாம் என்று மத்திய நிபுணர் குழுக்களிடம் பரிந்துரை பெற்றது, 2006-ல் ஆட்சிக்கு வந்த பிறகு உச்சநீதிமன்ற அறிவுரையின்படி, கேரள முதல்-மந்திரி அச்சுதானந்தனைச் சந்தித்து சுமூகமான தீர்வுக்கு பாடுபட்டது, அதன் பிறகு டிசம்பர் 2006-ல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பேராசிரியர் சைபுதீன் சோஸ் மற்றும் தமிழக, கேரள பொதுப் பணித்துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச வழி வகுத்தது.

    1956-ல் அண்ணா வைத்த கோரிக்கை போல் முல்லை பெரியாறு அணை இருக்கும் பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க வேண்டும் என்று அழுத்தமாக 2012-ல் கோரிக்கை வைத்தது, எல்லாமே கலைஞர் தான்.

    பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் கலைஞர் முதல்- அமைச்சராக இருந்து இந்த பிரச்சனைகளையெல்லாம் கையாண்ட விதத்தைப் பார்த்து நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன். மத்திய அமைச்சர் கடந்த கால வரலாற்றை எடுத்துப் படித்துப் பார்த்து முல்லை பெரியாறு, காவிரி விவகாரங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

    காவிரி பிரச்சனையில் மத்திய பா.ஜ.க. அரசு செய்த துரோகங்களையும், அதை வேடிக்கை பார்த்த அதிமுக அரசின் மவுனத்தையும் பட்டியல் போட்டிட பக்கங்கள் போதாது.

    இருந்தாலும் சிலவற்றை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது” “பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை என்று விதண்டாவாதம் செய்தது” “காவிரி வரைவு திட்டம் அமைக்க கால தாமதம் செய்தது” “கதைக்கு உதவாத ஒரு வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக தாக்கல் செய்தது” “தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய இறுதி தீர்ப்பின் அடிப்படையிலான தண்ணீரை 4.75 டி.எம்.சி குறைக்க காரணமாக இருந்தது”

    “காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது” “அப்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் இன்றைக்கும் நிரந்தர தலைவர் போடாமல் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இருப்பது”, “மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய அனுமதி கோரி கர்நாடக மாநில அரசு எழுதிய கடிதத்தை முதலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முன்பு வைக்காமல் மறைத்தது”, “காவேரி மேலாண்மை ஆணையத்தின் முன் அனுமதி இல்லாமல் மத்திய நீர்வள ஆணையமே மேகதாது அணைகட்டும் திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கியது”, “ஒட்டுமொத்தமாக நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை பிசுபிசுக்க வைத்தது” எல்லாமே பொன் ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சிதான் என்பது தமிழக மக்களுக்கும், காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் நன்கு தெரியும்.


    இந்த தமிழக விரோத செயல்களை எல்லாம் இங்குள்ள அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்தது என்பதும், அந்த அரசுக்கு ஆதரவாகத்தான் தி.மு.க. துரோகம் செய்து விட்டது என்று பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டுகிறார்.

    இது “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல் ஊழல் அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் எங்கள் கழகத் தலைவர் சொன்னது போல் அமையப் போகும் “கொள்ளைக் கூட்டணியை” அம்பலத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

    இப்போது கூட அகில இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்திற்காக டெல்லி சென்ற எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அன்னை சோனியா காந்தியிடமும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியிடமும், மேகதாது பிரச்சனை பற்றி எடுத்து கூறியிருக்கிறார்.

    எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடமும் மேகதாது பிரச்சனை பற்றி பேசி வலியுறுத்தியிருக்கிறார். இது எதையுமே அறிந்தும் அறியாதவர் போல் மத்திய அமைச்சர் பேசியிருப்பது அவருக்கு எங்கிருந்தோ ‘அ.தி.மு.க.வை ஆதரித்துப் பேசு’ என்று வந்த கட்டளை என்றே தெரிகிறது. காவிரியில் நடை பயணம் மேற்கொண்டு காவிரி வரைவு திட்டத்தை அமைக்க பாடுபட்டவர் எங்கள் கழகத் தலைவர். முல்லைப் பெரியாறு, மேகதாது அணை எதுவாக இருந்தாலும் முன்னனியில் நின்று தமிழகத்திற்காக, தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுப்பவர் எங்கள் தலைவர்.

    ஆகவே இதையெல்லாம் மறைத்துப் பேசினால் தமிழக மக்கள் தங்களை நம்பி விடுவார்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நினைத்தால் அது அவர் காணும் பகல் கனவாகவே முடியும் என்றும், காவிரியிலும், மேகதாது அணையிலும் தமிழகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு செய்துள்ள துரோகத்தை ஒரு போதும் தமிழக மக்களும், விவசாயிகளும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு துரைமுருகன் கூறி உள்ளார். #DMK #DuraiMurugan #PonRadhakrishnan
    ×